'யம்மா! பேப்பர் வாங்க கூட காசில்லை, பிறப்பு சான்றிதழ் தர எப்படி முடியும்?' - விரட்டும் இலங்கை, வெளியேறும் அகதிகள்

'பேப்பர் வாங்க கூட காசு இல்லாமல் இருக்கிறோம் அதனால் உங்கள் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர முடியாது என கூறி இரண்டு மாத கைக்குழந்தையை திருப்பி அனுப்பிய இலங்கையிலிருந்து கண்ணீருடன் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் தமிழகம் வந்துள்ளது.

Update: 2022-05-03 06:30 GMT

'பேப்பர் வாங்க கூட காசு இல்லாமல் இருக்கிறோம் அதனால் உங்கள் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர முடியாது என கூறி இரண்டு மாத கைக்குழந்தையை திருப்பி அனுப்பிய இலங்கையிலிருந்து கண்ணீருடன் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் தமிழகம் வந்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக அங்கிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 45 நாட்களில் 70க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழக வந்தவண்ணம் இருக்கின்றனர், இந்நிலையில் நேற்று காலை இரண்டு சிறுமி ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் இறக்கி விடப்பட்டனர். பின்பு அங்கிருந்து அவர்களை மரைன் போலீசார் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


பின்பு காவல்துறை அவர்களை அழைத்து விசாரணை நடத்தி அவர்களை தற்போது காப்பகத்தில் வைத்துள்ளது, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இலங்கையைச் சேர்ந்த அகதி பெண் ஒருவர் கூறியதாவது, 'எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன குழந்தை பிறப்பு சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகத்திற்கு சென்றால், 'பேப்பர் வாங்க கூட காசு இல்லாமல் இருக்கிறோம் நிலைமை சீரானதும் பிறப்புச் சான்றிதழ் தருகிறோம்' எனக் கூறி அனுப்பி விட்டனர்.

'இப்படிப்பட்ட நாட்டில் எப்படி வாழ முடியும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பசி பட்டினிக்கு ஆளாகி சீரழிந்து வருகிறோம் முழுக்க முழுக்க மக்கள் வாழத் தகுதியற்ற நாடாக இலங்கை மாறிவிட்டது' என கண்ணீர் வடித்தார். அதனையடுத்து அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Source - Vikatan

Similar News