கொள்ளிடத்தில் கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால் - 'இதுவா விடியல்' என மக்கள் வேதனை!
கொள்ளிடத்தில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை ஊரடங்கால் வருமானம் இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்கள் இதுவா 'விடியல்' என வேதனை.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நிவாரணநிதி ரூ.2 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவ்வாறு ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீர்காழி அடுத்த இதில் கொள்ளிடத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் அரை லிட்டர் ஆவின் பால் (புல்கிரீம்) பழைய விலை ரூ.25.50 என்ற அச்சடிக்கப்பட்டதினை கருப்பு ஸ்டிக்கர் மூலம் திருத்தி,புதிய குறைக்கப்பட்ட விலைபட்டியல்படி ரூ.24 என 28.5.21 என்று தேதியுடன் அச்சடிக்கபட்டுள்ளது. ஆனால் விற்பனையாளர் ரூ.24-க்கு விற்காமல் ரூ.27-க்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் 200 மிலி ஆவின் பால் எம்ஆர்பி ரூ.11 என இருந்தும் ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிக விலைக்கு ஏன் பால் விற்பனை செய்கீறிர்கள் என வாடிக்கையாளர்கள் கேட்கும்போது பால் பாக்கெட்டுகளை கெடாமல் வைத்திட குளிர்விப்பான் பயன்படுத்துவதால் அதற்கான மின்செலவை யார் கொடுப்பார் அதற்காகதான் மின்சார செலவிற்காக கூடுதல் விலை என ஆவின் விற்பனையாளர் கூறிவருகிறார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பொது முடக்கத்தால் வேலைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுதால் 'இதுவா விடியல்' என மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
Source - மாலை மலர்.