'தேனிலவே இன்னும் முடியவில்லை, அதற்குள் ரவுடியிசம் தலைதூக்க தொடங்கிவிட்டது' - செல்லூர் ராஜு காட்டம்..!

Update: 2021-05-30 06:45 GMT

"தி.மு.க ஆட்சியின் ரவுடியிசம் தலைதூக்க தொடங்கிவிட்டது" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று காலை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கமே இல்லை. வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குக் கூடுதலாக ரூ.5000 ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். தற்போதைய நிலையில் முந்தைய ஆட்சியைக் குறை சொல்வதெல்லாம் சரியாக இருக்காது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் கொரோனா மரணங்கள் அதிகரித்தன. கொரோனா நோய்த்தொற்று காட்டுத்தீ போல பரவியது. தி.மு.க ஆட்சியில்தான் கொரோனா மரண எண்ணிக்கையும் கூடியுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே அதிகாரிகளுக்கு மிரட்டல் உருட்டல் வரும் என எல்லோருக்குனே தெரியும். அ.தி.மு.க ஆட்சியில் அதிகாரிகளிடம் எந்தப் பிரச்சனைக்காகவும் நாங்கள் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பேச மாட்டோம். ஆனால், இங்கே தி.மு.க பிரமுகர் தலையீட்டில் ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் மாற்றப்பட்டுவிட்டார். தி.மு.க ஆட்சியின் தேனிலவே இன்னும் முடியவில்லை. அதற்குள் ரவுடியிசம் தலைதூக்க தொடங்கிவிட்டது" என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Similar News