"அண்ணா!, தம்பி!!" என்ற பாசப்போராட்டங்கள் அறிவாலயத்தில் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் தென்படுகின்றன. மு.க.அழகிரி, ஸ்டாலின் ஆகியோரை இணைத்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ற போஸ்டர்கள் தற்பொழுது தமிழக அரசியலில் பேசு பொருள் ஆகியுள்ளன.
கருணாநிதி உயிருடன் உள்ளபோதே மு.க.அழகிரியின் சில நடவடிக்கைகள் கட்சியின் விதியை மீறுகின்றன என காரணம் காட்டி மு.க.அழகிரியை தி.மு.க'வை விட்டு விலக்கி வைத்தார். அதுவரை தி.மு.க'வின் தென் மண்டல பொறுப்பாளராக இருந்தார் மு.க.அழகிரி. பின்னர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகும் மு.க.அழகிரிக்கு தி.மு.க'வில் இடமளிக்கப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் கூட மு.க.அழகிரி தி.மு.க'விற்கு ஆதரவாக இல்லை.
இந்த நிலையில் தி.மு.க தேர்தலில் வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வராக பொறுபேற்றதற்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அண்ணன் தம்பி சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் மதுரை மாநகரம் எங்கும் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர், தற்போது மதுரை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் அரசியல் களத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த போஸ்டரில் ஜூன் 3 பிறந்தநாள் விழா, தமிழகத்தின் வெற்றி தலைவருக்கு சமர்ப்பணம் என்று, கருணாநிதி புகைப்படம் நடுவிலும், வலது புறம் ஸ்டாலின் மற்றும் அழகிரியும் இடது புறம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதியும் இடம் பெற்றுள்ளனர். மேலும் அழகிரியின் முக்கிய ஆதரவாளரான் முபாரக் மந்திரியால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அழகிரியின் அதிதீவிர ஆதரவாளரான முபாரக் மந்திரி, இப்படியொரு போஸ்டர் ஒட்டியது, அழகிரி ஆதரவாளர்களிடையேயும் மற்றும் மதுரை திமுகவினரிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிலர் உறுதியாக அண்ணன், தம்பி சந்திப்பு நடந்தே தீரும் எனவும் கூறுகின்றனர்.