இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அவரை சந்தித்தபின் மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளதாக மஹாராஷ்டிரா முதல்வர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், 2018 ஆம் ஆண்டில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தபோது, மராத்தா சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே டில்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அவருடன் துணை முதல்வர் அஜித் பவார், அமைச்சர் அசோக் சவான் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது, மராத்தா மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு, புயல் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது "ஜி.எஸ்.டி, மராத்தா இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை செய்தோம். மராத்தா இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது." என்று அவர் கூறினார்.