ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் இளம் தலைவருமான ஜிதின் பிரசாதா பா.ஜ.க-வில் ஐக்கியம்!

Update: 2021-06-09 09:55 GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம் தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பா.ஜ.க வில் தன்னை இணைத்து கொண்டார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா காங்கிரசின் இளம் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஒரு காலத்தில் அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருங்கியவராகவும் இருந்தார். செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்தார். கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என சோனியாவுக்கு கடிதம் எழுதிய தலைவர்களில், இவரும் ஒருவர். சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பணியாற்றினார்.


இந்த நிலையில் இன்று மதியம் பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் முன்னிலையில், ஜிதின் பிரசாதா பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு பியுஷ் கோயல் சால்வை அணிவித்து கவுரவித்ததுடன், உறுப்பினர் அட்டையையுடன், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.


பா.ஜ.,வில் இணைந்த பிறகு ஜிதின் பிரசாதா கூறியதாவது "காங்கிரசுடன் எனக்கு மூன்று தலைமுறை தொடர்பு உள்ளது. பல்வேறு ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். காங்கிரசில் பணியாற்றும் போது, மக்களுக்காக உழைக்க முடியவில்லை. ஒரே குடும்பத்தினரால் இயக்கப்படும் கட்சியாக பா.ஜ.க இல்லை. அமைப்பு ரீதியாக செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ.க உள்ளது. புதிய இந்தியாவை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார். நாட்டிற்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். தேசிய கட்சியாக பா.ஜ.க மட்டுமே உள்ளது." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News