தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தி.மு.க அரசு தோல்வி அடைந்துவிட்டது - ஜெயக்குமார் காட்டம்!
"தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தி.மு.க அரசு தோல்வி அடைந்துவிட்டது" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் 14ம் தேதி அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தி.மு.க அரசு தோல்வி அடைந்துவிட்டது. 39 எம்.பி.க்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி வாங்க தி.மு.க அரசு முயற்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க ஆட்சியில் கொரோனா உயிரிழப்புகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இறப்புகளை தி.மு.க அரசு மறைக்கிறது" என்றார்.
மேலும், "அ.தி.மு.க ஆட்சியில் நடத்தப்பட்ட இறப்பு தணிக்கை, தி.மு.க ஆட்சியில் நடத்தப்படவில்லை. பரிசோதனை செய்யாமலே கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுகின்றனர். ஊரடங்கை பொறுத்த வரையில் ஊரடங்காகே இல்லை. இதை சரியாக அமல்படுத்தவில்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. கொரோனா குறித்த உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.