உத்தர பிரதேச தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க - உ.பி துணை தலைவரான ஏ.கே.சர்மா!
இன்னும் சில மாதங்களில் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதர் மோடி, அமித் ஷா மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஏ.கே.சர்மா உத்தர பிரதேச மாநில பா.ஜ.க துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் உயர் பதவியில் இருந்தவர் ஏ.கே. சர்மா. அவர் கடந்த ஜனவரி மாதம் தாமாக முன்வந்து பணி ஒய்வு பெற்று, பா.ஜ.க-வி்ல் இணைந்தார். உத்தர பிரதேச மேல்சபை உறுப்பினராக இருந்த ஏ.கே.சர்மா, தற்போது மாநில பா.ஜ.க துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க அதற்கான பணியை துவங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் .