மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குஜராத் சென்றுள்ளார். அப்பொழுது தனது பாராளுமன்ற தொகுதியான காந்திநகரில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா "18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இது மிகவும் முக்கியமான முடிவாகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட அனைவரையும் தடுப்பூசி போடும் இலக்கை விரைவாக நாம் அடைவோம். இந்த கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து பேசினார். அப்பொழுது அமித் ஷாவிற்கு பூங்கொத்து கொடுத்து, ஆளுநர் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது மாநில துணை முதல்வர் நிதின்பாய் படேலும் உடன் இருந்தார்.