'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!' - தி.மு.க-வின் வாக்குறுதிகளும், அடித்த பல்டிகளும்!

Update: 2021-06-22 09:00 GMT

"ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போறாரு!" என கோடிகளில் இறைத்து விளம்பரம் செய்து ஆட்சியை பிடித்த தி.மு.க ஆரம்பம் முதல் இன்றுவரை ஆட்சி செய்வதில் குளறுபடி, வாக்குறுதிகளில் பல்டி, நிர்வாகத்தில் பூஜ்யம் என மண்ணை கவ்வி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி தி.மு.க அடித்த அந்தர் பல்டிகள்,

1) பெட்ரோல், டீசல் விலையில் பல்டி

கடந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும் டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம் என்று தி.மு.க கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக மக்களிடம் காலில் விழுந்தது. ஆனால் தற்பொழுது ஆட்சியை பிடித்தவுடன் இதைச் சுட்டிக்காட்டி சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஆவேசமடைந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "வாக்குறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்ற தேதி சொன்னோமா?" என பொறுப்பில்லாமல் பதிலளித்தார்.

இது பெட்ரோல், டீசல் பல்டி ஆனது.

2) எழுவர் விடுதலையில் பல்டி

கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி. அமைச்சரவையைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். இதனை அடிமை அ.தி.மு.க அரசு என வெளிப்படையாக தி.மு.க'வினரும் அப்போது கண்டித்தனர்.

தற்போது தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறது. மத்திய பா.ஜ.க'வின் தயவும் தேவையில்லை. தங்களை பெருமையாக பறைசாற்றிக் கொள்ளும் தி.மு.க ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியாகவும் சிக்கல் எதுவும் இல்லை என முன்னாள் நீதியரசர்கள் வழிகாட்டியும், இன்னும் கடிதம் எழுதும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு ஏன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸரே ஏழுவர் விடுதலை கூடாது என கூறுவதை எதிர்த்து கேள்வி கேட்க கூட வக்கில்லாத நிலையில் இன்று தி.மு.க நிற்கிறது.

இது ஏழுவர் விடுதலை பல்டி.

3) டாஸ்மாக் விவகாரத்தில் பல்டி

குடித்தவர்கள் கூட மதுவை குடித்த பிறகே தள்ளாடுவார்கள், ஆனால் தி.மு.க குடிக்காமலேயே டாஸ்மாக் விவகாரத்தில் தள்ளாடி தலைகுப்புற விழுகிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனோ காரணமாக நாற்பது நாள்கள் அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தபோது, தி.மு.க மிகக் கடுமையாக எதிர்த்தது. 'குடிகெடுக்கும் பழனிசாமி அரசு' என கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. ஸ்டாலின் குடும்ப சகிதமாக கருப்பு சட்டையுடன் களத்தில் பதாகை ஏந்தி நின்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மட்டுமல்ல, மது ஆலைகளையும் மூட உத்தரவிடுவோம் என்றெல்லாம் தி.மு.க'வினர் கண்ணை மூடிக்கொண்டு வாக்குறுதி கொடுத்தனர்.

ஆனால், நாளொன்றுக்கு பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகிவந்த நேரத்தில், மதுக்கடைகளைத் திறந்தது தி.மு.க அரசு. இதற்கு விளக்கமாக, 'கள்ளச்சாராயம் பெருகிவிடக்கூடாது, மதுக்கடைகளை அடைத்துவிட்டால் பொருளாதாரத்துக்கு என்ன செய்வது?' என வழக்கமாக தி.மு.க கருணாநிதி காலம்தொட்டே கூறி வரும் புளித்த காரணத்தை தங்கள் வாய் புளிக்காமல் கூறினர் தி.மு.க'வினர்.

இப்படியாக டாஸ்மாக் விவகாரத்தில் மதுவாடை இல்லாமலே தி.மு.க தள்ளாடி தலைகுப்புற விழுந்தது.

4) நீட் தேர்வு பல்டி

தேர்தல் பிரசாரத்தின்போது, வீதிக்கு வீதி 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்துசெய்வோம்' என உத்தரவாதம் தந்தது தி.மு.க அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போது, நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

போதாக்குறைக்கு தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வு உருவாக்கிய பாதிப்புகள் பற்றி அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறார். நீட் தேர்வால் கடந்த சில ஆண்டுகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியாதா? அப்படி தெரியாமல் தான் இத்தனை வருடமாக கம்பு சுற்றினாரா ஸ்டாலின்?

இப்படி நீட் தேர்வு விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியாமலேயே தி.மு.க குட்டிக்கரணம் அடித்து வருகிறது.

5) மின் கட்டண பல்டிகள்

கொரோனா முதல் அலையின்போது மின்கட்டண வசூலை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தி.மு.க, "ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும்" என்றார்கள். இப்போதே தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மின் கட்டணம் செலுத்த சில நாள்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்துவிட்டு, இனி கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என கறார் காட்டுகிறார்கள்.

இப்படியாக தி.மு.க ஆட்சிக்கு வந்தால் போதும் என அடுக்கடுக்காய் பொய்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசி கோடிகளில் விளம்பரம் செய்துவிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்த உடன் "நீலச்சாயம் வெளுத்து போச்சு டும்! டும்!! டும்!!!, ராசா வேஷம் கலைஞ்சு போச்சு டும்! டும்!! டும்!!!" என சாயம் வெளுத்து நிற்கின்றனர்.

Source - ஜூனியர் விகடன்.

Similar News