"பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும்" என அரசியல் கட்சிகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், ஜனவரி 16, 2021-ல் தொடங்கி இதுவரை ஒரு நாளைக்கு சராசரி 50 லட்சம் என்றளவில் ஜூன் 23-ந்தேதி வரை 29 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 18 சதவிகிதம். இதில் இரண்டு டோஸ் போட்டவர்கள் 5 கோடி பேர். இது மக்கள் தொகையில் வெறும் 3.8 சதவிகிதம் மட்டுமே.
அதேநேரத்தில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2021-ம் ஆண்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 7 கோடியே 50 லட்சம் பேர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
எனவே, அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும்" என்றார்.