"சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் கூடாதென்றால் அது பெரும் தவறு" - சீறும் வானதி சீனிவாசன்!

Update: 2021-06-27 12:30 GMT

"சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் முழக்கம் கூடாதென்றால் சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு இப்பேரவை என்ன பதில் சொல்லப் போகிறது" என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுத்ததை பாராட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் பேசினார். ஈஸ்வரன் பேசியதை நாங்க எல்லாரும் பார்த்து கொண்டிருந்தோம். தமிழக சட்டப்பேரவை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராகச் செயல்படும் என்றால், சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு இப்பேரவை என்ன பதில் சொல்லப் போகிறது.

எங்கள் தலைவர் நயினார் நகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் வந்தன. எங்கள் கருத்துகளை சொல்ல சட்டப்பேரவையில் இடம் வேண்டும். சட்டமன்றத்துக்கு நான் புதிது. அதனால், உடனடியாக இதைப் புரிந்துக் கொண்டு எதிர்வினையாற்றவில்லை. கட்சி தலைவர்களிடம் இதுபற்றி பேசிய பின்னர் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்." என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும், "நாங்கள் பொறுப்பான அரசாகவே இந்த அரசை பார்க்கிறோம். பல்வேறு திட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற வேண்டிய காலம். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கிறது. வேறு சித்தாந்த பின்னணியிலிருந்து வந்தாலும் மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். மத்திய அரசுக்கு எதிரானவர்கள், மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாதவர்கள், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் போன்றவர்களை தமிழக அரசு குழுவில் நியமித்துள்ளது. அப்படி செய்தாலும்கூட தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்துதானே செயல்பட வேண்டும். இணைந்து செயல்பட்டால்தான் தமிழகத்துக்கு நல்லது" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Similar News