சத்தமில்லாமல் அ.ம.மு.க-வை மெல்ல சிதைத்து வரும் தி.மு.க?

Update: 2021-07-01 01:00 GMT

சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுகவை குறிவைக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக, அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை குறிவைத்து தனது பக்கம் ஈர்த்து வருகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவில் இருந்து திமுகவுக்கு தாவி வந்த அமைச்சரைக்கொண்டு, இன்னும் பலரை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சென்னையில் வைத்து, அமமுகவில் பெரிய பொறுப்பில் உள்ள தலைவரிடம் பேசிய விஷயம் வெளியில் கசிந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரை அமமுகவில் இருந்து திமுகவிற்கு அழைத்து வந்ததில், அந்த அமைச்சர், முக்கிய பங்கு வகித்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அமமுகவில் சசிகலாவின் மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகளை தம் பக்கம் ஈர்க்க திமுக மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அதிமுக தலையிடுவதற்குள் தாம் முந்திக்கொள்ள வேண்டும் என முயற்சிகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே அமமுகவில் இருந்த இன்றைய திமுகவின் முக்கிய நிர்வாகிகளான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு திமுகவில் வழங்கப்பட்ட அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு பலரும் ஆர்வம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது.

அமமுகவின் மாவட்ட செயலாளர்களை, முன்னாள் எம்.எல்.ஏ.க்களை இழுத்து வந்த திமுக, இப்போது உச்ச அதிகாரத்தில் உள்ள ஒருவரை, எப்படியாவது உள்ளே இழுக்க வேண்டும் என்ற முனைப்பில், அமைச்சரை வைத்து வார்த்தை நடத்தி வருகிறது.  

Similar News