'திமிர் மற்றும் அறியாமை போன்ற வைரஸ்களுக்கு தடுப்பூசியே கிடையாது' : ஹர்ஷவர்தன் பொளேர்!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி விநியோகம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஏற்ப மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் போன்ற தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜூலை மாதமும் வந்துவிட்டது ஆனால் இன்னும் கொரோனா தடுப்பூசி இந்தியா வந்து சேரவில்லை." என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் "ஜூலை மாதத்திற்கான கொரோனா தடுப்பூசியின் கையிருப்புகள் மற்றும் அதன் தகவல்களை நேற்று தான் நான் பதிவு செய்தேன். ராகுலுக்கு என்ன தான் பிரச்சனை? அவர் அந்த தகவல்களை பார்க்கவில்லையா அல்லது அவருக்கு புரியவில்லையா ? திமிர் மற்றும் அறியாமை போன்ற வைரஸ்களுக்கு தடுப்பூசியே கிடையாது." என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும் ராகுல் காந்தியின் ட்வீட்டிற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் "ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படும். தடுப்பூசி குறித்து 15 நாட்களுக்கு முன்னரே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், வெற்று அரசியல் சரியானது அல்ல என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்." எனறு அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.