தமிழகத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த நான்கு பேர் வெற்றி பெற்று, சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினர், மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுடனான இன்றைய இனிய சந்திப்பு தமிழகத்தின் நலன் சார்ந்த தொலைநோக்கு பார்வையை அளிப்பதாக , உற்சாகமூட்டக்கூடிய வகையில் இருந்தது." என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு முடிந்த பின்னர், இவர்கள் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் தமிழகத்தில் பா.ஜ.க அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழகத்தின் உள்ள தி.மு.க அரசின் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.