2017-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க வெற்றி பெற்று, திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த மார்ச் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்த பிறகு, லோக்சபா எம்.பி. யான தீரத் சிங் ராவத், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் தீரத் சிங் ராவத் செப்டம்பர் மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்தது. அதுமட்டுமின்றி உத்தரகண்ட் மாநில பா.ஜ.க விலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கடந்த மூன்று நாட்களாக டில்லியில் முகாமிட்டிருந்த அவர் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். பின்னர் தீரத் சிங் ராவத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் டேராடூனில் நடந்தது. இந்த கூட்டத்தில், கதிமா தொகுதி எம்.எல்.ஏ வான புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். கதிமா தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட புஷ்கர் சிங், பா.ஜ.க வின் இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார்.