'கர்நாடகத்தின் வஞ்சத்தில் சிக்கிவிட கூடாது' - ஸ்டாலினுக்கு அறிவுறுத்தும் டாக்டர்.ராமதாஸ்!
"கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனர் மரு.ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது.
மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதை நியாயப்படுத்த தமிழகத்தில் பவானி ஆற்று பாசனப் பகுதியில் குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்கள் கர்நாடகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தப்படுவதைப் போல, மேகேதாட்டு அணை மற்றும் நீர்மின்னுற்பத்தி திட்டத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறுவது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும். குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்களையும், மேகேதாட்டு அணை மற்றும் நீர்மின் திட்டத்தையும் ஒப்பிடுவதே தவறாகும். மேகேதாட்டு அணை நீர் மின்னுற்பத்திக்காகவும், பெங்களூரு நகரத்திற்கு 4.75 டி.எம்.சி குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் தான் கட்டப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுவதை கர்நாடகத்தின் கடந்த கால வரலாறையும், இந்த சிக்கலின் முழு பரிமாணத்தையும் அறிந்த எவரும் நம்ப மாட்டார்கள்.
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நேர்மையும், அறமும் எத்தகையது என்பதை கடந்த காலங்களில் நாம் கற்ற பாடங்களும், பட்ட காயங்களும் நமக்குச் சொல்லும். அவற்றை நினைவில் கொண்டு மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.