'மக்கள் சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும்' - கொரோனோ குறித்து முதல்வர் ஸ்டாலின்!
"தமிழக மக்கள் தாங்களே தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும்" என தமிழக முதல்வர் கொரோனோ தொடர்பான விளக்கத்தின் போது கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றுப் பரவல் குறையாத நிலையில், பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியம் குறித்துக் காணொலியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன். நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் - அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்கக் கூடாது.
கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. மத்திய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம்.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை. மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு, அவசியத்தின் காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படி வரும்போதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்.