"பா.ஜ.க-வால் அ.தி.மு.க ஆட்சியை இழந்தது என்பது பகிரங்கமான பொய்" - சுந்தர ராஜ சோழன் அலசல்!

Update: 2021-07-07 07:06 GMT

சி.வி.சண்முகத்தின் பேச்சை தொடர்ந்து 2021 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் பங்கு குறித்து அரசியல் விமர்சகர் சுந்தர ராஜ சோழன் அவர்களின் பார்வை பின்வருமாறு.

2019-ஆம் ஆண்டில் இருந்தே சொல்வதுதான். பா.ஜ.க இல்லை என்றால் அ.தி.மு.க 25% வாக்குகளை தாண்ட முடியாது என்பதே நிதர்சனம். 2021 சட்டபேரவை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு 40% வாக்குகள் வந்துள்ளது என்றால், அதில் 10% பா.ஜ.க வாக்குகள்தான்.

2019-ல் அ.தி.மு.க-வை விட்டு வெளியேறிய அருந்ததியினரை உள்ளே கொண்டு வர பா.ஜ.க மாநிலத் தலைவராக அருந்ததியினரை கொண்டு வந்து, வி.பி.துரைசாமி அவர்களை தி.மு.க-வை விட்டு வெளியே கொண்டு வந்து, அந்த வாக்குகளை மீண்டும் கொண்டு வந்தது பா.ஜ.க தான்.

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வென்றிருக்கிறது, ஆனால் சோழ மண்டலம், தொண்டை மண்டலத்தில் மரண அடி வாங்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன?

ஹிந்துத்துவா எங்கே சமூகங்களை இணைக்க உதவியதோ? அது பயன்படுத்திக் கொள்ளப்பட்டதோ? அங்கே அ.தி.மு.க வென்றது. வட மாவட்டத்திலும், டெல்டாவிலும் அதை செய்யவில்லை.

பா.ஜ.க இருந்தால் நமக்கு வாக்குகள் விழாது என்று தவறான புரிதலில் பா.ம.க தள்ளியே நின்றது. இதுதான் பிற சமூக வாக்குகளை ஜாதி கடந்து உள்ளே கொண்டு வர முடியாமல் போனது. ஒரு Caste neutral தலைவர் இல்லாத இடத்தில் ஹிந்துத்துவா தளத்தில், மோடி இமேஜ் போய் சேர்ந்த பகுதிகளில் அ.தி.மு.க வென்று விட்டது. அதை பயன்படுத்த தவறிய இடங்களில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது. நிற்க.

இதை ஒட்டி, பா.ஜ.க இருந்ததால் இஸ்லாமியர் வாக்குகள் வரவில்லை என்று சி.வி.சண்முகம் சொல்வது உண்மையென்றாலும் அதனால்தான் தோற்றேன் என்பது உண்மையல்ல, அதனால்தான் அ.தி.மு.க ஆட்சியை இழந்தது என்பது பகிரங்கமான பொய்.

அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வாக்கு பலத்தோடு இருக்கும் தொகுதி வாணியம்பாடி.1967-ல் இருந்து அங்கே இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்தான் வென்று வருகிறார்கள். 2002-ல் வடிவேல் என்கிற இந்துவை நிறுத்தி வெற்றி பெற வைத்தவர் செல்வி ஜெயலலிதா.

2021 தேர்தலில் அங்கே அ.தி.மு.க-வை சேர்ந்த செந்தில் குமார் வென்றுள்ளார். அங்கேயும் பா.ஜ.க கூட்டணி தானே இருந்தது? எப்படி செந்தில் குமார் வென்றார்? அதுவும் தி.மு.க-வின் இஸ்லாமிய வேட்பாளரை மீறி?

ஒரே காரணம்தான் வாணியம்பாடியில் இந்து என்கிற அரசியல் கருத்து தளம் வேலை செய்தது. அங்கே செல்வி ஜெயலலிதா இல்லை என்றாலும் மோடி என்கிற இமேஜ் வேலை செய்தது. அப்படி வேலை செய்யவில்லை என்றால் அந்த தொகுதியில் சி.வி.சண்முகம் சொன்னது போல தோற்றிருக்க வேண்டும் அ.தி.மு.க.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தோல்விக்கு முக்கியமான காரணம், ஓ.பி.எஸ் அணி என்கிற காரணத்தால் லட்சுமணனை தி.மு.க-விடம் இழந்தது, அதே போல பா.ம.க கூட்டணியால் அ.தி.மு.க-வின் பட்டியல் சமூகத்து வாக்குகளை முழுமையாக இழந்தது என இதுதான் தலையாயது.

அ.தி.மு.க-வுக்கு ஒருங்கிணைந்து இஸ்லாமியர்கள் வாக்களித்ததே கிடையாது. செல்வி ஜெயலலிதா இருந்த போது அவரது பிம்பத்திற்கு இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் வந்திருக்கலாம், இப்போது அவையெல்லாம் பா.ஜ.க இல்லை என்றாலும் வந்திருக்காது. பா.ஜ.க இருந்ததால் இஸ்லாமியர் வாக்கு வராமல் விழுப்புரத்தில் அ.தி.மு.க தோற்றது என்பது உண்மை என்றால் வாணியம்பாடியில் எப்படி அ.தி.மு.க வென்றது என்ற உண்மையை யார் சொல்வது?

Similar News