ஊடகங்கள் தி.மு.க ஆட்சி தவறுகளை பேசாமல், முட்டு கொடுக்கிறது - சி வி சண்முகம்!
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகளுடன் கூட்டணி வைத்து தமிழ்நாடு தேர்தலை சந்தித்து. இதில் அ.தி.மு.க கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்து சட்டமன்றத்தில் வலுவான எதிர்கட்சியாக அமைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் நடந்த அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசும்போது "தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது ஸ்டாலினுக்கே தெரியும், அதுமட்டுமின்றி அவரே அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
பெட்ரோல் விலையைக் குறைப்போம், காஸ் மானியம் கொடுப்போம், பெண்களுக்கு மாதம் ₹1,000 தருவோம் என்று கூறிய தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று என கேட்டால், ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற ஆணவத்தில் நாங்கள் என்ன தேதி போட்டோமா என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் காட்டமாக பதில் சொல்கிறார்.
அ.தி.மு.க-வின் சில தேர்தல் வியூகம் தி.மு.க-விற்கு சாதகமாகி விட்டது, இதன் காரணமாகவே தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலின் தான் முதலமைச்சராக வர வேண்டும் என தமிழக மக்கள் வாக்கு அளிக்கவில்லை. மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் தி.மு.க ஆட்சியை தாங்கி பிடிக்கும் வகையில், அவர்களின் தவறுகளை வெளிக்கொண்டு வராமல் முட்டு கொடுத்து வருகிறது." என்று அவர் பேசினார்.