ராணிப்பேட்டையில் மன்னராட்சி நடத்துகிறாரா தி.மு.க எம்.எல்.ஏ காந்தி? - இளவரசர்கள் போல் சுற்றும் காந்தியின் மகன்கள்!
எந்தவொரு பொறுப்பிலும் இல்லாத அமைச்சர் காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தி.மு.க-வினர் மற்றும் அரசு அலுவலர்களுடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, தி.மு.க சார்பில் நான்காவது முறை சட்டமன்றத்துக்குத் தேர்வாகியிருப்பவர் ஆர்.காந்தி. கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் காந்திக்கு வினோத், சந்தோஷ் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும்தான் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-வில் அதிகாரம் செலுத்திவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
காந்தி, மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், கட்சிப் பணிகளில் அவரின் மகன்கள் தலையீடு அதிகம் இருக்கிறதாம். பல்வேறு சமயங்களில் தந்தைக்கு பதிலாக அவருடைய மகன்கள்தான் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்களாம். ராணிப்பேட்டை தி.மு.க-வின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும் காந்தியின் மகன்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கட்சிப் பொறுப்பில் இல்லாதவர்கள் குறித்து தி.மு.க-வின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவிடுவது, தி.மு.க மூத்த நிர்வாகிகளையும் கடுப்படையச் செய்திருக்கிறது.
வாலாஜாபேட்டை தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரின் இளைய மகன் சந்தோஷ் கலந்துகொண்டு துணை ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.
"ராணிப்பேட்டை மாவட்டத்தில், மன்னர் ஆட்சி நடத்தும் அமைச்சர் காந்தியையும், மாவட்ட நிர்வாகத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் செயல் தொடர்ந்தால், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும்'' என அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தி.மு.க-வின் அடாவடிகளில் இதுவும் ஒன்று என ராணிப்பேட்டை வட்டாரம் புலம்புகிறது.
Source - ஜூனியர் விகடன்.