நாடு முழுவதும் ஒரே சட்டம் - பா.ஜ.க கொள்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆதரவு!
நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆதரவு அளித்துள்ளது.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பல ஆண்டுகளாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு முக்கியமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் என்ற பாஜகவின் கொள்கை. நம் நாட்டில் சட்டங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று கிரிமினல் சட்டம், மற்றொன்று சிவில் சட்டம். இதில் கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. சிவில் சட்டத்தில் மட்டும் மதங்களுக்கு ஏற்ப சில தனிச்சட்டங்கள் உள்ளன. எனினும் சிவில் சட்டத்தில் 80 சதவீதத்துக்கும் மேலான விஷயங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்து வருகிறது.
மக்கள் தமக்கு இடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய மதம் தொடர்புடைய மிகச் சில விஷயங்கள் மட்டும் தனியார் சிவில் சட்டங்கள் எனப்படுகின்றன. அந்த தனியார் சட்டங்கள் மட்டும் சிலவற்றில் மாறுபடுகின்றன. இவற்றில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு அவர்கள் சமயம் சார்ந்து தனியாக சிவில் சட்டம் உள்ளது. ஆனால் இந்தியாவில் கோவாவில் மட்டும் அவர்களுக்கு தனி சிவில் சட்டம் என்று ஒன்று கிடையாது. அங்கு கடைபிடிப்பது பொது சிவில் சட்டம் மட்டுமே. எனவே கோவாவை போல் நாடு முழுவதும் பின்பற்றும் வகையில் ஒரே சிவில் சட்டம் இயற்ற கடந்த ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.
சாதி, இனம், மதம் ரீதியான தடைகளை உடைத்து நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற கனவு இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காதது ஏன் என்ற கேள்வியையும் டெல்லி உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.