#கொங்குநாடு 'கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்' : தனி மாநிலம் பற்றி வானதி சீனிவாசன் சூசகம்?

Update: 2021-07-10 10:45 GMT

"கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்" என கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் சூசகமாக கொங்குநாடு பற்றி பதிவு வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து தமிழகத்தில் இருந்து தனியாக பிரித்து 'கொங்கு நாடு' என வகைப்படுத்த சமூக வலைதளம், அச்சு ஊடகங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் இது பற்றிய பேச்சு கிளம்பியுள்ளது. மேலும் இது தி.மு.க-வின் அரசியல் ரீதியிலான மோதல் போக்கால் பிரிக்கப்படுகிறது என தகவல்கள் வேறு பரவி வருவதால் ஆளும் தி.மு.க தரப்பை இது வயிறு எரிய வைத்துள்ளது.

இந்நிலையில் கோவை தெற்கு எம்.எல்.ஏ-வும் பா.ஜ.க அகில இந்திய மகளிரணி தலைவியுமாகிய வானதி சீனிவாசன் தனது முகநூல் பதிவில் "கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்" என சூசக பதிவு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, "கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு,காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.

ஆகெழு கொங்கர் என்று பதிற்றுப்பத்திலும், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே என்று புற நானூற்றிலும் கொங்கு தேசம் பற்றிய விரிவான சித்திரம் தமிழ் சங்ககால இலக்கியம் முழுக்க பரந்து இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பாளையப்பட்டுக்கள் என்று கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பொருளில் மூதுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

கொங்கு நாடு தனியாக வேண்டும் என குரல்கள் சத்தமாக ஒலிக்கும் வேளையில் தமிழகத்தின் முக்கிய எம்.எல்.ஏ "கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்" என சூசக பதிவிட்டிருப்பது 'கொங்கு நாட்டிற்கு' வானதி சீனிவாசன் அவர்களின் முழு ஆதரவு உண்டு என்பதையே காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News