'கொங்கு நாடு என்பது பிரிவினை வாதம் அல்ல, அது வளர்ச்சியின் அடையாளம்' பெஸ்ட் ராமசாமி பேச்சு!
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் உயர்நிலைக் கூட்டம், கோவையில் அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நடந்தது. இதில், கோவையை தலைநகராகக் கொண்டு கொங்குநாடு தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று 1994 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், 2009 ஆம் ஆண்டு கோவை மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. மேலும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, கொங்கு நாடு மாநிலம் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த கழக கூட்டத்தில் பெஸ்ட் ராமசாமி 'கொங்கு நாடு கோரிக்கை என்பது பிரிவினை வாதம் அல்ல, இது வளர்ச்சியின் அடையாளம். ஏற்கனவே இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம், பீஹார், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அதில் இருந்த குறிப்பிட்ட பகுதியை புது மாநிலங்களாக ஏற்படுத்தப்பட்டன.
கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க அனைத்து தகுதிகளும் மற்றும் உரிமையும் மத்திய அரசிடம் உள்ளது. எனவே உடனடியாக கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக செயல்படுத்த வேண்டும். இங்குள்ள 11 மாவட்டங்களில் 10 லோக்சபா, 61 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கோவையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும். தனி மாநிலமாக பிரித்தால் இங்கு தொழில் வளர்ச்சி பெருகும்.' என்று அவர் கூறினார்.