'உதயநிதி படம்.. தலைமை செயலகமா இல்லை அறிவாலயமா?' : ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
தமிழகத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மேலும் இந்த தேர்தலில் ஸ்டாலினின் மகன் உதயநிதி திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, அந்த தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். எப்படி கருணாநிதி காலத்தில் தி.மு.க கட்சியினர் ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வந்தாரோ, அதே போல் தான் தற்போது உதயநிதி அவர்களையும் தி.மு.க வினர் கொண்டாடி வருகின்றனர்.
தி.மு.க. வில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தமிழகத்திற்கு தி.மு.க அமைச்சர்கள் செய்யும் நலத்திட்டங்கள் தொடர்பான திறப்பு விழாவில் கூட, உதயநிதி தான் அந்த நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அது மட்டுமின்றி திமுக வில் உள்ள பெரும் தலைவர்கள், எம்.எல்.ஏ க்கள் மேடையில் பேசும்போது கூட உதயநிதியை புகழ்ந்து பேசுகின்றனர், குறிப்பாக திமுக வில் உள்ள அனைத்து தலைவர்களை விட உதயநிதி மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் மற்றும் அவர் தான் இந்தியாவில் இருக்கும் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்று பேசுகின்றனர். இன்னும் சில அமைச்சர்கள் ஒரு படி மேலாக தலைமை செயலகத்தில் உள்ள தங்கள் அறையில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ வான உதயநிதி படத்தையும் மாட்டி வைத்துள்ளனர்.
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அவரது அறையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த படத்தில் அமைச்சர் அறையில் ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் படங்களை தொடர்ந்து உதயநிதி படமும் இருப்பது தெரிய வந்தது.
இந்த புகைப்படத்தை பார்த்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி படம். தலைமை செயலகமா? அறிவாலயமா?" என்று கேட்டுள்ளார்.