'விவசாயிகள் திருடர்கள்' : தமிழக நிதியமைச்சரின் ஆணவத்தை தோலுரித்து காட்டிய அண்ணாமலை!
சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது அந்த கூட்டத்தில் அவர் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனுமதி இல்லாமல் ஆற்றில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார். அது மட்டுமின்றி அவர் விவசாயிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக "திருடர்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த பேச்சை கண்டித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு, முல்லை பெரியாறு ஆற்று பகுதி விவசாயிகள் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்தும், ஆற்றில் இருந்து வாய்க்கால் வாயிலாகவும் நீர் பாய்ச்சுகின்றனர். ஆனால், விவசாயிகள் அனுமதி இல்லாமல் ஆற்று நீரை திருடுவதாக கூறி விவசாயிகளுக்கான மின்சார இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
இதனால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். ஜூலை மாதம் 8 ஆம் தேதி மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அரசின் அனுமதி இல்லாமல் ஆற்று நீரை திருடி வருகின்றனர். இதன் காரணமாக தான் தண்ணீர் திருடிய விவசாயிகளுக்கு இனி தங்களுடைய தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல தடை உத்தரவை பிறப்பித்தேன் என்று மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.
விவசாயிகளை ஒட்டு மொத்தமாக திருடர்கள் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நா கூசாமல் கூறியது கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு "திருடர்கள்" என்று தமிழக நிதியமைச்சர் பட்டம் கொடுத்துள்ளார். விவசாயிகள் தண்ணீரை எடுத்து தங்களுது உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவரது இந்த தடை உத்தரவு காரணமாக ஆறு, வாய்க்கால் அருகில் இருந்து பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் விவசாயிகள் அனைவரும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக விவசாயிகளை பாதிக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே இந்த பிரச்சனையில் ஸ்டாலின் தலையிட்டு அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்." என்று அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.