அமைச்சர் என்பதால் விலக்கு கிடையாது - நீதிமன்றத்தில் ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு!
வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் ஆகஸ்ட் 6'ம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி 2011 - 2015'ம் ஆண்டின் காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வேலை வாங்கி தருவதாகக் கூறி, 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது நீதிபதி அமர்வு 'அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது. சட்டத்தின்முன் அனைவரும் சமம்' என்று கூறி கண்டிப்பாக ஆகஸ்ட் 6'ம் தேதி ஆஜராகவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
ஏற்கனவே 'நான் முதல்வரானால் செந்தில்பாலாஜியை கைது செய்வேன்' என இன்றைய முதல்வர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடதக்கது.