"காங்கிரஸ் டெபாசிட் வாங்குறதே கஷ்டம்" - கூட்டணி கட்சியான காங்கிரஸை வெட்டிவிட்ட லாலு !
''காங்கிரஸ் தோற்பதற்கு நாங்கள் தொகுதி ஒதுக்க வேண்டுமா? அப்படி ஒதுக்கினால், டெபாசிட்டை கூட இழந்து விடும்" என ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லல்லுபிரசாத் யாதவ் கூறியது பரபரப்பாகியுள்ளது.
பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் வெற்றி பெற்றிருந்த 2 தொகுதிகளில் எம்.எல்.ஏ'க்கள் மரணம் அடைந்ததால், காலியாக உள்ள அத்தொகுதிகளுக்கு 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. குஷேஷ்வர் அஸ்தான் என்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்பார்த்தது. ஆனால், அக்கட்சிக்கு ஒதுக்காமல், ராஷ்டிரீய ஜனதாதளமே அங்கு போட்டியிடுகிறது. இதனால், இரு கட்சிகளிடையிலான கூட்டணி முறிந்து விட்டதாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லல்லுபிரசாத் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "காங்கிரஸ் தோற்பதற்கு நாங்கள் தொகுதி ஒதுக்க வேண்டுமா? அப்படி ஒதுக்கினால், டெபாசிட்டை கூட இழந்து விடும்'' என்று பதில் அளித்தார்.
ராஷ்டிரீய ஜனதா தளத்தை விமர்சித்து வரும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பக்த சரண்தாசை ''அவருக்கு ஏதாவது தெரியுமா?'' என்று லல்லு கிண்டலடித்தார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை லாலு விமர்சித்திருப்பது காங்கிரஸ் தலைமையிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.