தேர்தல் கலவரத்தில் தி.மு.க'வினர் பெண் கவுன்சிலர் சேலையை உருவிய விவகாரம் - நடவடிக்கை எடுக்காமல் அலையவிடும் காவல்துறை !

Update: 2021-11-09 09:45 GMT

தென்காசியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைப்பதற்காக பெண் கவுன்சிலர் சேலையை பிடித்து தி.மு.க'வினர் இழுத்த சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடந்தது. மறைமுகத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க ஆதரவாளரான சரவணன் மனுதாக்கல் செய்தபோது குருமூர்த்தி தரப்பினர் அதைத் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், வாக்களிப்பதற்காக அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர்களை எதிர்த்தரப்பினர் மறித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பெண் கவுன்சிலர் சகாயமேரி என்பவரின் சேலையை பிடித்து இழுத்தனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து பெண் கவுன்சிலர்களான சகாயமேரி மற்றும் கவிதா ஆகியோர் புளியரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் சேலை இழுத்ததாக சகாயமேரி அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், கவிதா புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அ.தி.மு.க'வினர் வருத்தம் தெரிவிக்கிறார்கள். மேலும் இதுகுறித்து கவுன்சிலர் சகாயமேரி கூறுகையில், "துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற என்னை அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் சாலையிலேயே தடுத்து நிறுத்தினாங்க. அங்கிருந்த பலரும் தி.மு.க'வினரால் வெளியூர்களில் இருந்து அழைத்து வந்தவர்களாக இருந்தாங்க. நானும் என்னோடு வந்தவங்களும் வேகமாக உள்ளே சென்றபோது தடுத்தவர்கள், அத்துமீறி என் சேலையைப் பிடித்து இழுத்து உருவினாங்க. சாலையில் எனக்கு நேர்ந்த அவமானத்தால் நான் நிலைகுலைந்து கதறினேன். போலீஸார் வந்த பிறகே அந்த கும்பல் சேலையைக் கொடுத்தது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் எனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் கொடுத்தும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை" என்று வேதனை தெரிவித்தார்.



Source - Junior Vikatan

Similar News