கொள்ளை மாவட்டமாக உருவாகி நிற்கும் திருவாரூர் - பீதியில் வாழும் மக்கள் !

Update: 2021-11-09 10:00 GMT

திருவாரூர் மாவட்டத்தில் தொடரும் அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்களால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அடுத்ததாக நன்னிலம் அருகே விசலூரில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் பாலமுருகன், தன் குடும்பத்துடன் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றார். அவர் கிளம்பிய அடுத்த சில மணி நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் அவரின் வீட்டுக் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

மன்னார்குடி காமராஜ் நகரில் வசித்துவரும் ரெங்கராஜ் என்பவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள் இதனைதொடர்ந்து திருவாரூர் அருகே கூட்டுறவு நகரில் வசித்துவரும் பள்ளி ஆசிரியை கவிதா, தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, தனது வீட்டைப் பூட்டி, குடும்பத்தோடு வேதாரண்யம் சென்றுவிட்டு, அடுத்த சில தினங்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 25 பவுன் தங்க நகைகளும், 25,000 ரூபாய் பணமும் கொள்ளை போயின.

இதுபோல் இன்னும் 3 கொள்ளை சம்பவங்கள் நடந்த நிலையில் திருவாரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காவல்துறை இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது மக்களை இன்னும் பீதியடைய செய்துள்ளது.



Source - Junior Vikatan

Similar News