கல்லூரி துவங்கி ஒரு மாதத்துக்குள் இந்து மத வகுப்புகள் நடத்தவில்லை எனில் அனுமதி ரத்து - தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை !
"கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது" என இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்து கோயில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் பரமத்திவேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் என 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது தமிழக உயர்கல்வித்துறை.
இந்த அனுமதியை தொடர்ந்து இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்து, கோவில் சொத்துக்களை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், இது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை பின்பற்றியே கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், பல கோவில்களில் இருந்து பொது நிதிக்கு பெறப்பட்ட பங்களிப்பு நிதியில் இருந்து தான் கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள், கோவில் நிதியை பயன்படுத்துவதால் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் சட்டப்படி தான் கல்லூரிகள் தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அதேசமயம், 4 கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் தொடங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், 4 கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் தொடங்க வேண்டும். கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.