நேர்மையான அதிகாரியை பந்தாடுவதா? - இன்னோசென்ட் திவ்யா விவகாரத்தில் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி !

Update: 2021-11-23 00:30 GMT

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மறைமுக அரசியல் அழுத்தம் கொடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா'வை இடமாற்றும் முடிவை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து,அவற்றைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.மக்கள் நலனைப் புறந்தள்ளி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அரசியல் அழுத்தம் கொடுத்து நேர்மையான அதிகாரியைப் பந்தாடும் தமிழ்நாடு அரசின் பொறுப்பற்றச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

கொரோனா தொற்றுப்பரவல் தடுப்புப்பணிகளில் முதலிடம் எனப்பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறப்பாகப் பணியாற்றி வருவர் மாவட்ட ஆட்சியர் இன்னொசெண்ட் திவ்யா. யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்கவும் பெரும் முயற்சியெடுத்தார்.

அப்பணிகளில் எவ்விதத்தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முழுமையாக யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்கும்வரை நீலமலை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாதென்று கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் சொகுசு விடுதி உரிமையாளர்களுக்குச் சாதகமாக மாவட்ட ஆட்சியரை மாற்ற தி.மு.க அரசு முடிவெடுத்துள்ளதாக நீலமலை மாவட்ட மக்கள் ஐயம் தெரிவித்தனர். தி.மு.க அரசு முயல்வது மக்களின் ஐயப்பாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆகவே, சூழலியல் மீது பெரும் அக்கறைகொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரை, மாவட்ட ஆட்சியரை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மறைமுக அரசியல் அழுத்தம் கொடுத்து இடமாற்றும் முடிவை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Source - Seeman Tweet

Similar News