"சூர்யா குடும்பம் ட்ரஸ்ட் நடத்துறதே பணத்தை வெள்ளையாக்க தானே" - ஜான் பாண்டியன்
கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் டிரஸ்ட் நடத்துவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்து, தயாரித்து வெளியான படம் 'ஜெய்பீம்'. இப்படம் ஏற்படுத்திய சர்ச்சைகள் ஏராளம், இப்படத்தில் சூர்யா பழங்குடி இன மக்களுக்கு உதவுவதாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் சூர்யாவின் குடும்பம் சாதி வெறி பிடித்த குடும்பம் என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "பணத்தை வெள்ளையாக்கவே நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் டிரஸ்ட் நடத்துவதாகவும், படத்தில் செய்ததைப் போல் நிஜத்தில் எத்தனை பட்டியலின மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவியிருக்கார். படத்தில் இருப்பது போல் நிஜத்தில் அவர் நடந்துகொள்வதில்லை" எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஜான் பாண்டியன் கூறியதாவது, "கோவையில் விமான நிலையத்தில் நடிகர் சிவகுமாரை சந்தித்தேன். அப்போது அவரது மகன் சூர்யாவும் அங்கு இருந்தார். சூர்யாவை பார்த்ததும் மக்கள் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிவகுமார் என்னிடம் வந்து நீங்கள் எனது மகன் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறினார். அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதன்மூலம் தான் நடிகர் சிவகுமாரிடத்தில் சாதிவெறி இருப்பதை உணர்ந்தேன்" என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.