ஆன்லைன் சூதாட்ட சாத்தானுக்கு இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம்: ராமதாஸ் வேதனை!
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படக்கூட இல்லை. உச்சநீதிமன்றத்தில் அந்த மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டாலும் கூட, அதில் வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள் இன்னும் ஏராளமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்யும் வாய்ப்புள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் அதன் கொடுங்கரங்களால் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. வழக்கமாக தனக்கு அடிமையானவர்களை மட்டும் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம், இந்த முறை 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தையே அழித்திருக்கிறது. இதற்குப் பிறகும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதித்தால், அது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாக அமையும்.
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பன்னாட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் அவரது மனைவி மற்றும் இரு மகன்களை கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெள்ளிக் கிழமை நடந்த இந்த சோகம் நேற்று தான் வெளியில் தெரியவந்திருக்கிறது. வங்கியில் நல்ல பதவியில் இருந்த மணிகண்டன், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை இழந்து விட்டதாக தெரிகிறது. சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் இழந்து விட்ட மணிகண்டன், ரூ.75 லட்சம் வரை கடன் வாங்கியிருந்ததாகவும், அதை திரும்ப செலுத்த முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்த சிலர் கடந்த திசம்பர் 31&ஆம் தேதி மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று கேட்டதாகவும், அப்போது தான் கணவனின் கடன்சுமை குறித்து அறிந்த மனைவி அதைத் தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மோதலின் உச்சத்தில் தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு மனிகண்டனும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்ததால், தமிழ்நாடு மற்றும் புதுவையில் தற்கொலை செய்து கொண்ட ஏழாவது மனிதர் மணிகண்டன் ஆவார். இந்த 7 ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளும் ஆண்டுக்கணக்கில் நடந்து விடவில்லை. மாறாக, வெறும் 4 மாதங்களில் இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து நிறைவேற்றப்பட்டிருந்த சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3&ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் ஆகஸ்ட் 20&ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட சோகம் மறையும் முன்பே தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்தடுத்து மேலும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அனைத்து தற்கொலைகளுக்கும் காரணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனது தான்.