அடுத்தவர்களின் பிள்ளைக்கு தங்களின் பெயரை சூட்டுவது மட்டுமே தி.மு.க.வின் வேலை: எடப்பாடி பழனிசாமி!

Update: 2022-01-11 14:06 GMT

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக 30 வருட ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், ஆகியவற்றோடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான குடிநீர், கல்வி, சாலை வசதிகள், வேளாண்மைத்துறை, தொழில்துறை, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கிய பெருமை, சத்துணவு நாயகர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும், அவரைத் தொடர்ந்து, புதிய வீராணம் திட்டம், ஏழை, எளியவர்களுக்கு நியாய விலைக்கடை மூலம் 20 கிலோ விலையில்லா அரிசி, தடையில்லா மின்சாரம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களைத் தந்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும், தொடர்ந்து தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் வகையில் குடிமராமத்துத் திட்டம், நெகிழி இல்லா தமிழகம், உணவு உற்பத்தியில் தொடர் சாதனை, மருத்துவத்துறையில் தொடர் சாதனை, உயர் கல்வியில் 2030ல் அடைய வேண்டிய இலக்கை 2020லேயே அடைந்து சாதனை, உள்ளாட்சியில் நூற்றுக்கணக்கான விருதுகம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி படிக்க 7.5 சதவீத உள்ஒதுக்கீடு என்று சாதனைகள் பல புரிந்த அம்மாவின் அரசையும், தமிழக மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள்.

தென்றலும், வாடைக் காற்றும் வீசும் இடை, இடையே தோன்றும் அனல் காற்று போல, அவ்வப்போது சந்தப்பவசத்தால் அமைந்த திமுக அரசு, பொய், பித்தலாட்டங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தைகளை தங்களுடையது என்று, எங்கும் எதிலும் விளம்பரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட இப்போதுள்ள இந்த விடியா அரசைக் கண்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள்.

மேலும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் 1450 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்காக, அம்மாவின் அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக, சுமார் 109 ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறியுள்ளது.

நாளை (12.01.2022) மாண்புமிகு, பாரதப் பிரதமர் அவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார் என்ற செய்தி அறிந்து உள்ளபடியே மிகுந்து மகிழ்ச்சி அடைகிறேன். மாண்புமிகு அம்மாவின் அரசு கோரிக்கை வைத்தவுடன், தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு அனுமதியும், மத்திய அரசின் பங்கையும் வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை இந்த விடியா அரசு, தான் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதை அதிமுக சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன். இனியாவது இந்த விடியா அரசு அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல், எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பரப்படுத்தும் மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றினை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy:India Today

Tags:    

Similar News