அரசியல் பழிவாங்கல் உன்பெயர் திமுகவா? முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனைக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கண்டனம்!
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோர கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது விடியா திமுக அரசு. அரசியல் பழிவாங்கல் உன்பெயர் திமுகவா? ஏற்கனவே 5 முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய திமுக, வெறுங்கையோடு திரும்பிய நிகழ்வை மறந்து, மீண்டும் முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு.கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோரது இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோரது இல்லங்களிலும் சோதனை என்ற சட்ட ஈரலை இன்று நடத்திக் கொண்டிருக்கிறது.
சாமானிய மக்கள் அரசை எதிர்த்து குரல் எழுப்பினால் வழக்குப் பதிவு; அதற்கும் ஒருபடி மேலே சென்று சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினரை எதிர்த்துக் குரல் எழுப்பினால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்; ஆளுகின்ற ஆட்சியின் மீதும், அதிகாரிகள் மீதும் உண்மையான குற்றத்தைக் கண்டுபிடித்து அரசியல் களம் கண்ட, அதிமுக தலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை எனும் ஆயுதத்தைத் தொடர்ந்து திமுக அரசு இயக்கிக் கொண்டிருக்கிறது.
விடியா திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணாமாக, தருமபுரி மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K. P. அன்பழகன், M.L.A., அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் 'ரெய்டு'க்கு கடும் கண்டனம். pic.twitter.com/JiXi6IoODA
— AIADMK (@AIADMKOfficial) January 20, 2022
மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் முனைப்பு காட்டாத விடியா திமுக அரசு, அரசியலில் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு வருகின்றபோது, அதனை மறைத்து அரசியல் சூழ்நிலைகளை திசை திருப்ப, தந்தையார் வழியில் தனயனும் முயற்சி செய்கிறார். இலவு காத்த கிளியாக 10 ஆண்டுகளாக சட்டமன்றத்திற்கு வெளியே முதலமைச்சர் நாற்காலிக்காக காத்துக் கொண்டிருந்த ஸ்டாலின், அந்த இருக்கை கிடைத்த உடனே, எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம், கூப்பாடு போட்டோம், என்னென்னவெல்லாம் மக்களைத் திரட்டி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மக்களுக்கு பெரும் துரத்தை கொடுத்தோம் என்பதையெல்லாம் மறந்து, இன்றைக்கு மக்கள் விரோத அரசை, விடியா அரசின் முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார்.