"நிலத்தை வித்தா கமிஷன் கொடுக்க மாட்டியா?" - விவசாயிகளை தாக்கிய தி.மு.க நிர்வாகி!
நிலம் வாங்கியதற்கு கமிஷன் கொடுக்காததால் விவசாயிகள் இருவரை தி.மு.க பிரமுகர் கொடூரமாக அடித்து உதைத்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவி செட்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு இரண்டு மகன்கள் கார்த்திக் மற்றும் இந்திரகுமார். இவர்கள் குடும்பத்துடன் விவசாயம் மற்றும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகி மணிமாறன் தி.மு.க-வில் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய அவைத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த மணிமாறன் கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல், அடிதடி பிரச்சனை உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்ததாக அங்கு உள்ளவர்களால் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்திரகுமார், கார்த்தி ஆகியோர் ராஜபாளையம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளனர். இதற்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் தி.மு.க மணிமாறன் கமிஷன் கேட்டுள்ளார்.
அதற்கு விவசாயிகளான இந்திரகுமார் கார்த்தி ஆகியோர் 'நாங்கள் கஷ்டப்பட்ட பணம் எதற்கு கமிஷன்' என கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த தி.மு.க-வின் மணிமாறன் தனது அடியாட்களை வைத்து இந்திரகுமார் கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தை சரமாரியாக தாக்கி உளளார். இதனால் அந்த கிராமமே கதி கலங்கிப் போய் இருக்கிறது. தி.மு.க-வை சேர்ந்தவர் என்பதால் இவர் மீது பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.