கோவையில் தீவிரவாதிகள் இல்லாத இடம் சொல்லுங்கள்: போலீசாரிடம் காரச்சாரமான வாக்குவாத்தில் ஈடுபட்ட வேலூர் இப்ராஹிம்!
கோவையில் பிரசாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அடிப்படை ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது என்று பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வேலூர் இப்ராஹிம் முகாமிட்டுள்ளார். அதன்படி நேற்று (பிப்ரவரி 11) கோவை மாநகராட்சி 95வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜோசன் என்பவரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஜம்ஜம் நகர், போத்தனூர், திருமறை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தயாரானார். ஆனால் பிரசாரத்துக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் நடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் படையுடன் சென்று கைது செய்தனர். அவர்களை மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மதியம் 1.15 மணிக்கு விடுவித்தனர்.
கைது செய்வதற்கு முன்பாக வேலூர் இப்ராஹிம் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் பாஜக பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்பதுதான் திமுகவின் நோக்கம். அதாவது அடிப்படை சக்திகள் தாக்குதலில் ஈடுபடலாம். இதனால் உங்களின் உயிருக்கு ஆபத்து என்று போலீசார் கைது செய்கின்றனர்.
தேர்தல் பிரசாரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமை ஆகும். பாஜகவில் சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் என்கின்ற முறையில் கோவை மாநகராட்சியில் கட்சி சார்பில் சில பொறுப்புகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் வந்திருக்கிறேன். இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கும் நல்ல திட்டங்களை எடுத்துக்கூற வந்துள்ளேன். ஆனால் போலீசார் தங்களை அனுமதிக்காமல் மறுத்து முதல் நாளிலேயே கைது செய்துள்ளனர். அதற்கு அடுத்த நாள் பேசக்கூடாது என்று வாயில் கறுப்பு துணியை கட்டி எதிர்ப்பு பதிவு செய்தோம். அதற்கு கூட போலீசார் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்தனர்.
அதே போன்று இன்று (பிப்ரவரி 11) 3வது நாளாக கைது செய்துள்ளனர். இஸ்லாமியர் பகுதிகளில் நுழைவதற்கு மறுப்பு தெரிவித்து கைது செய்துள்ளனர். இது திட்டமிட்ட சதி பாஜக வெற்றி பெறக்கூடாது என்று திமுக போலீசாரை ஏவி விடுகின்றனர். பாஜக தோல்விக்கு போலீஸ் தான் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்கிறீர்களா என போலீசாரிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டோம். ஜனநாயக உரிமையை திமுக குழித்தோண்டி புதைத்துள்ளது. மேலும், கோவையில் தீவிரவாதிகள் இல்லாத பகுதியை காட்டுங்கள் அங்கு பிரசாரம் மேற்கொள்கிறோம் என்று கேட்டோம். ஆனால் அதனைகூட சொல்ல மறுத்துவிட்டனர். இவ்வாறு போலீசார் மீது வேலூர் இப்ராஹிம் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Source, Image Courtesy: Facebook