'"உங்க பெயர் இல்லை" - எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை அலைக்கழித்த தேர்தல் ஆணையம்

Update: 2022-02-19 14:30 GMT

கோவையில் வாக்களிக்க வந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் பெயர் பட்டியலில் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.


பா.ஜ.க'வின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவையில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். ஆனால் அங்கு உள்ள வாக்குச்சாவடியில் அவருடைய பெயரும் இல்லை அவருடைய வாக்காளர் எண்ணும் இல்லை என்பது தெரியவந்தது.


உடனே அதிர்ச்சி அடைந்த வானதி சீனிவாசன் இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு இணையத்தில் தேடிப்பார்த்து அதில் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியிலுள்ள கோயமுத்தூர் மலையாளிகள் சமாஜம் பள்ளியில் அவருக்கான வாக்குச்சாவடி இருப்பது தெரிய வந்தது உடனே அங்கு சென்று வானதி சீனிவாசன் தனது வாக்கினை பதிவு செய்தார்.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது, "தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் எந்தவித கவனமும் செலுத்தாமல் அரைகுறையாக இந்த தேர்தலை நடத்துகிறது. தேர்தல் ஆணையம் சரியான ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்னுடைய வாக்குச்சாவடி மையம் இன்னொரு பள்ளியில் காண்பிக்கிறது அதன் பின்பு அந்த வாக்குச் சாவடி மையத்திற்கு தேடி சென்று வாக்களிக்க வேண்டியதாக உள்ளது. எத்தனை மக்கள் பொறுமையாக தேடிச் சென்று தங்கள் வாக்கை செலுத்துவார்கள் என்பதும் சந்தேகமாக உள்ளது" என தெரிவித்தார்.


ஒரு தேசியக் கட்சியின் எம்.எல்.ஏ'வின் பெயரையே வாக்காளர் பட்டியலில் வாக்குச்சாவடி மாற்றி காண்பித்து குளறுபடி ஏற்படுத்திய தேர்தல் ஆணையம் எப்படி முழு தேர்தலையும் திறம்பட நடத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Source - Junior Vikatan

Similar News