"உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு" - சத்தியமூர்த்தி பவனில் கடுப்பான ராகுல் காந்தி

Update: 2022-03-02 11:00 GMT

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பிளவுகள், கட்சிக்குள் அடிதடிகளால் கடுப்பான ராகுல்காந்தி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 5 நிமிடத்தில் உரையை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்.


இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் முதல்வர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதற்காக சென்னை வந்திருந்த ராகுல் காந்தி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ள விழாவில் பங்கேற்பதற்கான திட்டமும் வைத்திருந்தார். ஆனால் தமிழக காங்கிரசாரின் செயல்பாடுகள் ராகுல் காந்தியை திருப்திப்படுத்தும் அளவிற்கு இல்லை கட்சிக்குள்ளேயே குட்டி குட்டி கும்பல்கள் மற்றும் கலவரங்கள், அடிதடிகள் போன்ற பல விவகாரங்களால் அப்செட்டான ராகுல்காந்தி இந்த முறை சத்தியமூர்த்தி பவனில் அதிக நேரம் செலவிடாமல் உடனே கிளம்பிவிட்டார்.


சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த விழா தொடங்குவதற்கு முன்னரே பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மேடைக்கு வந்தபோது அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை, கடுப்பான அவரது கும்பல் அதை கண்டித்து கோஷமிட்டனர். உடனடியாக மைக் பிடித்த இ.வி.கே.எஸ்.இளங்கோவன் "இந்த மேடையில் இடம் இல்லாமல் போனால் என்ன உங்கள் மனதில் எனக்கு இடம் இருக்கிறது" என கூறி அங்கிருந்து சென்றார்.


பின்னர் காங்கிரஸ் கட்சிக்காக அதிகம் செலவழித்தவர் என்ற பட்டியலில் ரூபி மனோகரன் பெயருமுண்டு அவரை கடைசி வரை மேடையே ஏற்றவில்லை. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. பல பெண் நிர்வாகிகள் காங்கிரஸில் இருந்த போதிலும் அவர்களில் ஒருவரை கூட மேலே ஏற்றவில்லை.


போதாக்குறைக்கு காங்கிரஸ் தலைமை பதவிக்கு போட்டியிடும் சில குழுவினர் ராகுலிடம் சென்று குறைகளை அடுக்க கடுப்பான ராகுல் காந்தியும் மேடையில் தான் பேசும்பொழுது, "ஒரு அறைக்குள் 50 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அடைத்தால் அவர்கள் 500 பேர் எழுப்பும் சத்தம் எழுப்புவார்கள்" என கடுப்பாக கூறினார். இது காங்கிரசாரை கலாய்க்கிறார் என்பது கூட தெரியாமல் காங்கிரஸில் இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தது தான் ஹைலைட் காமெடி.


இதனால் முழுக்க முழுக்க அப்செட்டான ராகுல்காந்தி ஐந்து நிமிடத்தில் தன் உரையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.



Source - Junior Vikatan

Similar News