புனே மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
புனேவில் மொத்தம் 32.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார், இந்த திட்ட துவக்கவிழா 12 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கார்மெயர் மெட்ரோ நிலையத்தில் நடந்தது. அங்கிருந்து ஆனந்த நகர் ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார், அந்தப் பயணத்தின் சமயத்தில் இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களுடன் உரையாடினார்.
பயணத்தின் முன்னதாக டிக்கெட் செலுத்தும் மையத்திற்கு சென்ற மோடி யு.பி.ஐ மூலம் பண பரிமாற்றம் செய்து நுழைவுச் சீட்டு வாங்கினார், பின்னர் முறையாக நுழைவு சீட்டை காண்பித்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
புனே மெட்ரோ திட்டத்திற்கான மொத்த செலவு 11,400 கோடி ரூபாயாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 24'ம் தேதி இந்த திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.