தமிழ்நாடு, கர்நாடகா நதி நீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது - மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர்

Update: 2022-03-07 02:30 GMT

மேகதாது விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் இடையே பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யத் தயார் என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான அறிக்கையை தயாரித்து கர்நாடக அரசு மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன, இந்த திட்டத்தால் பெங்களூரு நகருக்கு 4.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்பதும் மேலும் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதும் சாத்தியமாகும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.


ஆனால் இந்தத் திட்டத்தினால் விவசாயத்தை நம்பியுள்ள தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் சரிவர கிடைக்காமல் விவசாயம் செய்ய முடியாது எனவும் இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த திட்டத்தை மத்திய அரசு இதுவரை அனுமதி கொடுக்காமல் உள்ளது, இதற்கிடையே கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது இதனால் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் மேகதாது திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என பாதயாத்திரை நடத்தியது.


இந்நிலையில் நேற்று ஜல் ஜீவன் திட்டம் குறித்து தென்மாநிலங்கள் மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றம் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய எரிசக்தித் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "மேகதாது திட்டத்திற்கு கர்நாடகா அரசு தனது பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிந்தேன் இது நல்லதுதான் ஆனால் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நான் அதிகம் பேச விரும்பவில்லை ஆனால் சம்பந்தப்பட்ட கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு கிடைக்கும்" என்றார்.


இந்தப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது இது போலத்தான் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இடையே நதிநீர் பங்கீடு பிரச்சினை இருந்தது அதாவது கென்-பெத்வா நதிகள் இணைப்பு குறித்த பிரச்சனை இருந்தது, இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்துக் கொண்டது போல கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் மேகதாது திட்ட பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.


Source - Daily Thanthi

Similar News