"தி.மு.க'வில் உழைச்சா மரியாதையே இல்லங்க" - தரங்கம்பாடியில் பல ஆண்டுகளாக தி.மு.க'வில் இருந்த தம்பதி ராஜினாமா
உட்கட்சி விவகாரங்களால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் தி.மு.க நகர செயலாளர் பதவியையும் பேரூராட்சி கவுன்சிலர் பதவியை அவரின் மனைவி சரஸ்வதியும் ராஜினாமா செய்வதாக தி.மு.க தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் தி.மு.க நகர செயலாளராக வெற்றிவேல் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருகிறார், இவரின் மனைவி சரஸ்வதி 2001ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ள 18 வார்டுகளில் 16 வார்டுகளில் தி.மு.க வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது. 13ம் வார்டில் வெற்றி பெற்ற வெற்றி வேல் மனைவி சரஸ்வதி தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார், ஆனால் பேரூராட்சி தலைவர் பதவிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான நிவேதா முருகனின் உறவினருமான சுகுண சுந்தரி என்பவருக்கு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு இந்த விஷயங்களைக் கொண்டு செல்ல முயற்சிகளை எடுத்தபோதும் அனைத்தும் தோல்வி அடைந்தது. இதனால் விரக்தியடைந்த வெற்றிவேல் தி.மு.க நகர செயலாளர் பதவியையும், பேரூராட்சி கவுன்சிலர் பதவியை அவரது மனைவி சரஸ்வதியும் ராஜினாமா செய்ததாக தி.மு.க தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பூம்புகார் பகுதியில் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்கிறோம்" என்றார்.