விடுதலை சிறுத்தைகளை "ஜெயிக்கவிட்டு உழைச்ச நாங்க வேடிக்கை பார்க்குறதா?" - சீரும் நெல்லிக்குப்பம் தி.மு.க

Update: 2022-03-06 16:30 GMT

"பதவியை ராஜினாமா செய்ய முடியாது" என முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க சேர்மனின் கணவர் பதிலளித்துள்ள விவகாரம் தி.மு.க'வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் தி.மு.க தலைமையால் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க'வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "நான் குறுகி நிற்கிறேன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! கழகத் தலைமை அறிவித்தது மீறி தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற அவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்படுவார்கள்" என அறிக்கை விடுத்திருந்தார்.


இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மறைமுக தேர்தலின்போது தி.மு.க தரப்பில் ஆர்.ஆர் மெட்ரிக் பள்ளியின் உரிமையாளரும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவத் செயலாளருமான ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தான் சேர்மன் வேட்பாளர் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.க தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் தரப்பு சில வேலைகள் பார்த்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் ஜெயந்தி ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் கிரிஜா திருமாறன் தோல்வி அடைந்தார்.


ஆனாலும் ஏற்கனவே ஸ்டாலின் கூறியது போல் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவரது கணவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்! தி.மு.க'வின் வாக்குகளால் மட்டுமே நாங்கள் வெற்றி பெறவில்லை, இந்த நகரத்தின் நன்மையை கருதி அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எங்களுக்கு வாக்களித்ததால் தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். 26 வாக்குகள் வாங்கியிருக்கிறோம் அதில் 11 வாக்குகள்தான் தி.மு.க'வினருடையது. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எப்படி வி.சி.க'வை வெற்றிபெற வைக்க முடியும்?" என தெரிவித்தார்


இதுகுறித்து ராதாகிருஷ்ணனின் ஆதரவு கவுன்சிலர்கள் சிலர் கூறும்போது சேர்மன் பதவியை உங்களுக்குத்தான் என அமைச்சர் சி.வே.கணேசன் வாக்குறுதி கொடுத்ததால்தான் ராதாகிருஷ்ணன் சுமார் ஒரு கோடி வரை கடன் வாங்கி செலவு செய்தார், கட்சி பணம் கொடுக்காத நிலையில் சேர்மன் வேட்பாளர் என்ற முறையில் மற்ற வேட்பாளர்களின் செலவையும் ராதாகிருஷ்ணன் ஏற்று செலவு செய்தார், அப்படி இருக்கும் பொழுது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? என்றும் கேட்டனர்.



Similar News