உதயநிதியின் வேட்பாளரை எதிர்த்த கட்சி நிர்வாகியை, உள்ளே விடாத அறிவாலயம் - உடுமலைப்பேட்டை தி.மு.க பூசல்கள்
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய மற்றும் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக நின்று வென்ற தி.மு.க நிர்வாகிகள் அறிவாலயத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெருவாரியான வெற்றியைப் பெற்றாலும் உட்கட்சி பஞ்சாயத்து மற்றும் கூட்டணி பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை, "நான் உருகி நிற்கிறேன், குறுகி நிற்கிறேன்" என முதல்வர் ஸ்டாலினே வெதும்பி அறிக்கை விடும் அளவிற்கு கட்சியிலும் சரி கூட்டணிக் கட்சிகளிலும் சரி பல அடிதடி கலவரங்கள் நடந்து வருகின்றன.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான் தி.மு.க உட்கட்சி உள்ளேயே அடித்துக் கொள்வார்கள் அல்லது கூட்டணி கட்சியினரை போட்டியிடவிடாமல் தானே போட்டியிடுவார்கள். இந்த நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் வேட்பாளராக தி.மு.க தலைமை ஜெயக்குமார் என்பவரை அறிவித்தது. தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் களத்தில் சுறுசுறுப்பாக இருப்பார் என்பதால் உதயநிதியுடன் நெருக்கம் என்பதாலும் வேட்பாளராக அறிவித்தனர், ஆனால் ஏற்கனவே நகராட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த தி.மு.க நகர செயலாளர் மத்தீன் இதனால் அதிருப்தி அடைந்தார்.
சில உள்ளடி வேலைகள் செய்து மறைமுகத் தேர்தலில் ஜெயக்குமாருக்கு எதிராக நின்று மத்தீன் வெற்றி பெற்றார், இதனால் மத்தீன் மீது தலைமை மிகுந்த கோபத்தில் இருக்கிறது, மத்தீன் மட்டுமல்லாமல் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்த அனைவர் மீதும் தி.மு.க தலைமை கடுமை காட்டி வருகிறது, இதனால் தலைமையை சமாதானப்படுத்த அவர் ஆதரவாளர்களும் அறிவாலயம் சென்றுள்ளார், ஆனால் அறிவாலயம் மத்தீனையும் மற்றும் அவரை முன்மொழிந்த அவர்கள் வழிமொழிந்த அனைவர்களையும் யாரும் இங்கு வரக்கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளது.