கூடுதல் பேருந்து இல்லை என கூறிய மாணவர்கள்: தி.மு.க. எம்.எல்.ஏ., படிக்கட்டில் தொங்கியபடி பயணித்து காட்டினார்! எம்.எல்.ஏ கூற வருவது என்ன?
பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுப்பதற்காக அரசு நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ., ஒருவர் மாணவர்களும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து காண்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்காததால் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் அவலநிலை ஏற்படுகிறது. அது போன்று பயணம் செய்பவர்களை தடுப்பதற்காக போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போலீசார் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர். பல இடங்களில் விழிப்புணர்வு செய்தும் வருகின்றனர். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதி ஒருவரே பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்திருப்பது மற்றவர்களுக்கு ஒரு தவறான முன் உதாரணத்தை காண்பித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழஙகிவிட்டு திமுக எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் மாணவ, மாணவியர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றார். அங்கு இருந்த மாணவர்கள், திமுக எம்.எல்.ஏ.,விடம் சில குறைகளை கூறினர். கூடுதல் பேருந்து விட்டால் செல்வதற்காக எளிதாக இருக்கும், தற்போதைய நிலையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் நிலைதான் இருக்கிறது என்று மாணவர்கள் கூறியுள்ளனர். அந்த சமயத்தில் வந்த பேருந்தில் மாணவர்கள் ஏறும்போது கூட்டம் வழிந்து நிரம்பியது. இதனால் மற்ற மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஏறியிருந்தனர். அதனை பார்த்த திமுக எம்.எல்.ஏ.வும் படிக்கட்டில் ஏறி தொங்கியபடி பயணம் செய்தார்.
எம்.எல்.ஏ., செல்வதை பார்த்த திமுகவினரும் முண்டியடித்து படியில் தொங்கியபடி ஏறினர். இந்த சம்பவத்தால் பேருந்து நடத்துனர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியபடி இருந்தார். படியில் பயணம் செய்பவர்களை எப்போதும் நடத்துனர் எச்சரிக்கை செய்து வருவார். உள்ளே ஏறி செல்லுங்கள் என்று. தற்போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதியே படிக்கட்டில் பயணம் செய்து காண்பித்துள்ளார். இதனை பார்க்கும் மற்ற மாணவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar