வரும் ஜூலை மாதம் 17'ஆம் தேதி நீட் நுழைவுத் தர்வு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. 2014-15 ஆகிய ஆண்டுகளில் கோர்ட்டில் வழக்குகள் இருந்ததால் இந்த தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் 17'ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், இந்த ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை நாளை மறுநாள் சனிக்கிழமை முதல் மே மாதம் 7ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறவிருக்கிறது. பிறகு திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய கல்வித்துறை, தேசிய மருத்துவ கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி நீட் தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.