"உள்ளாட்சி தேர்தலில் தோற்ற கோபத்தை அயோத்தியா மண்டபத்தின் மீதா காட்டுகிறீர்கள்?" - தி.மு.க மீது அர்ஜுன் சம்பத் ஆவேசம்
தி.மு.க'வை உள்ளாட்சி தேர்தலில் தோற்கடித்த மக்களை பழிவாங்க அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் தி.மு.க அரசின் அறநிலையத்துறை பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்கிறது என இந்து மக்கள் கட்சி'யின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அர்ஜுன் சம்பத் விடுத்தவுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை கைப்பற்ற உள்ளதை கண்டித்து தமிழக பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில், ஆன்மீக அமைப்புகளின் சார்பில், நடைபெற்ற போராட்டத்தில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு நாகராஜன், 134 வது வட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், பாரதமாதா செந்தில் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அயோத்தியா மண்டபம் அமைந்துள்ள பகுதி மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றிபெற வைத்துவிட்டார்கள். தி.மு.க'வை தோற்கடித்தவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நீதிமன்றத்தில் நாளை இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை வந்து அயோத்தியா மண்டபத்தில் கைப்பற்றுவது என்பது மிகப் பெரிய சதித் திட்டமாகும்.
அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றுவதற்காக மண்டபத்தின் நுழைவாயிலை இடிப்பதும், அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தவர்களை கைது செய்ததும் வன்மையாக கண்டிக்கின்றோம். காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி இந்து இயக்கங்களின் தொண்டர்களை கைது செய்து அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றி இருப்பது எந்த வகையில் நியாயம்?
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இது விஷயத்தில் தலையிட்டு மேற்கு மாம்பலம் பகுதி மக்களுக்கும் அயோத்தியா மண்டபத்தில் ஆன்மீகப் பணி செய்து வருவோருக்கும் நியாயம் வழங்க வேண்டும்" என் குறிப்பிட்டுள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.