மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். அங்கு ஆட்சிக்கு வந்த பின்னர் இருந்து எதிர்க்கட்சிகளை குண்டர்களை வைத்து கொலை செய்வது, மிரட்டுவது போன்ற செயல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி அர்ஜுன் சவுராஷியா என்பவர் கொல்கத்தா புறநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இவரது மரணம் பா.ஜ.க.வினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, உயிரிழந்த சவுராஷியாவின் வீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், சவுராஷியா தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவைத்துள்ளனர் என்றார்.
மேலும், இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது: மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஒரு வருடத்தில் மேற்கு வங்க மக்கள் பார்த்தது, வன்முறை, கலவரம் மட்டுமே. பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தாக்குலை நடத்தி வருகின்றனர். அதே சமயம் மர்மமான முறையில் உயிரிழந்த சவுராஷியாவின் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar