மொத்த ஊடகங்களும், கைகட்டி வாய்பொத்தி அடிமை சேவகம் செய்யனுமா? தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!
'ஜி ஸ்கொயர்' என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது 24.05.2022 அன்று இரவு 9 மணிக்கு சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. மேலும், இந்தப் புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல், வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது, இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. ஜூனியர் விகடன் பெயரையோ அல்லது சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் ஆகியோரது பெயர்களைக் கூறி 'ஜி ஸ்கொயர்' நிறுவனத்தை யாராவது மிரட்டி இருந்தால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தையோ அல்லது அதில் உள்ள இரண்டு நபர்களையோ அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம். ஆனால், காவல்துறையில் 'ஜி ஸ்கொயர்' புகார் அளிப்பதும், இரவோடு, இரவாக மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டி உள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன் கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசிய திமுக,
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) May 23, 2022
'ஜி ஸ்கொயர்' நிறுவன புகாரின் பெயரில் @JuniorVikatan, சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீது வழக்கு போட்டு அதிகார மமதையின் உச்சத்திற்கு சென்றுள்ளது.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்கள் pic.twitter.com/v2ZrZjwyOu
முதல் தகவல் அறிக்கையில் 3வது குற்றவாளியாக 'ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்' என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல்துறைக்கு உரிமை வழங்கி உள்ளது.
இந்த பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்திற்கு உரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசிய இன்றைய ஆட்சியாளர்கள், அதிகார மமதையின் உச்சத்திற்கே சென்றுள்ளார்கள். அனைத்து செய்தி ஊடகங்களும் கைகட்டி, வாய்பொத்தி, தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது. தாங்கம் செய்யும் தவறுகளை எந்த ஒரு ஊடகமும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு இந்த அரசு உத்தரவுவிட்டது போல் தெரிகிறது.